சர்ச்சை கருத்து: பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்
‛பாரத் மாதா கீ ஜே’ எனும் கோஷத்தை எழுப்ப மறுப்பவர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என சர்ச்சை கருத்தை தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ் மீது ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை கருத்து:
கடந்த 2016ம் ஆண்டு நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் ‛பாரத் மாதா கீ ஜே’ கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என பேசியிருந்தார். இச்சர்ச்சை பேச்சுக்காக முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான சுபாஷ் பத்ரா, அரியானா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
விசாரணை:
இதனைத் தொடர்ந்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய போதும், கடந்த மே 12ம் தேதி விசாரணைக்கு பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
உத்தரவு:
விசாரணையில், சம்மன் அனுப்பிய போதும், நேரில் ஆஜராகாத பாபா ராம்தேவ் மீது ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.