சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்தை வீழ்த்தி பைனலில் பாக்.,
:சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. நேற்று
நடந்த அரையிறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சொந்த மண்ணில் சரிந்த சோகத்துடன் இங்கிலாந்து அணி வெளியேறியது.
கார்டிப்பில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.முதுகுவலி காரணமாக முகமது ஆமிருக்குப் பதில், ரம்மன் ரயீஸ் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
ரூட் ஆறுதல்
பாகிஸ்தானின் அபார பந்துவீச்சு காரணமாக ரன் சேர்க்க முடியாமல் இங்கிலாந்து திணறியது. ஹேல்ஸ் (13), ரயீசிடம் சிக்கினார். 27, 42 என, இரு முறை தப்பிப் பிழைத்த பேர்ஸ்டோவ், 43 ரன்னுக்கு ஹசன் அலி ‘வேகத்தில்’ அவுட்டானார். இதன் பின், ஜோ ரூட் (46) அவுட்டாக, அணியின் சரிவும் துவங்கியது. கேப்டன் மார்கன் 33 ரன்களுக்கு வெளியேறினார். பட்லர் (4) ஏமாற்றினார்.
பந்துகளை ‘விழுங்கிய’ ஸ்டோக்ஸ், 34 ரன்னுக்கு (64 பந்து) கிளம்பினார். கடைசி 83 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 49.5 ஓவரில், 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3, ஜுனைடு கான் 2, ரயீஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் பொங்கி எழுந்தது. அசார் அலி, பகர் ஜமான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இவர்களது அசத்தலான ரன்குவிப்பு கைகொடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது பாகிஸ்தான். ஜமான் 2வது, அசார் அலி 26வது அரைசதம் அடித்தனர். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் இதுபோல அரைசதம் எட்டியது இது தான் முதன் முறை.
முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித் ‘சுழலில்’ ஜமான் (57) அவுட்டானார். அசார் அலி 76 ரன்னுக்கு போல்டானார்.பாகிஸ்தான் அணி 37.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முதன் முறையாக முன்னேறியது. பாபர்(38), ஹபீஸ்(31)அவுட்டாகாமல் இருந்தனர்.