கத்தாருக்கு போர் விமானங்கள் : அமெரிக்கா ஒப்பந்தம்
வளைகுடா நாடுகளுக்கு இடையே நெருக்கடியான நிலை நிலவி வரும் நிலையில் எப்-15 போர் விமானங்களை கத்தாருக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கிஉள்ளது.
ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி கத்தாருடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன.
தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கத்தார் பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. இப்போது அந்நாட்டிற்கு தேவையான உணவு பொருட்களை ஈரான் அனுப்பி வருகிறது. துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவாக உள்ளன. இதற்கிடையே வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு உள்ள நெருக்கடியை சரிசெய்ய பேச்சுவார்த்தைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் சவுதி அரேபியா சென்ற பின்னரே கத்தாருக்கு எதிராக வளைகுடா நாடுகள் நடவடிக்கையில் இறங்கியது.
பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதை கத்தார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் கத்தாருக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதிநவீன எப் 15 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மத்தீஸ் மற்றும் கத்தார் செயலாளர் காலித் அல்-அத்தியாத் இடையே கையெழுத்தானது .
கத்தார் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கிறது என பிற அரபு நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்து கொண்ட நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கத்தார் விவகாரத்தில் ஏற்கனவே டொனால்டு டிரம்ப் தன்னுடைய ஆதரவு சவுதி அரேபியா தலைமையிலான நாடுகளுக்கே என்பதை குறிப்பிட்டுவிட்டார்.
இப்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தத்தால் இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கும் எனவும் பெண்டகன் குறிப்பிட்டு உள்ளது. கத்தாரும், அமெரிக்காவும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் உள்பட பரஸ்பர பாதுகாப்பு கவலைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி உள்ளன. அமெரிக்கா கடந்த ஆண்டு 21 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் கத்தாருக்கு 72 எப்-15 போர் விமானங்களை வழங்க உள்ளதாக ஏற்கனவே
தெரிவித்து இருந்தது.