சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய கோரிக்கை நிராகரிப்பு?
இந்திய கடற்படை முன்னாள் வீரர், குல்பூஷண் ஜாதவ் வழக்கில், தன் தரப்பு வாதத்தை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கை, சர்வதேச கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், 46, உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி, பாகிஸ்தான் ராணுவம் துாக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின், ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச கோர்ட்டில், மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த, 10 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட், ஜாதவின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து, மே, 18ல் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக, இந்தியா, பாகிஸ்தான் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய, சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அஸ்தார் ஆசப் அலியை மேற்கோள்காட்டி, பாகிஸ்தான் பத்திரிகைகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி விபரம்: இந்த வழக்கில், செப்., 13க்குள், இந்தியா, தன் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என, சர்வதேச கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதை, டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்ற, இந்திய அரசின் கோரிக்கையை, சர்வதேச கோர்ட் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் வரை அவகாசம் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.