வீடு வாங்குவோரை ஏமாற்றினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
‘குடியிருப்பு திட்டங்களில் பணம் செலுத்தியோரிடம், ஜி.எஸ்.டி., வரியை சுட்டிக் காட்டி கூடுதலாக பணம் வசூலிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது கட்டுமான பொருட்களுக்கு, 12.5 சதவீதமும், சிமென்டிற்கு இதை விட கூடுதல் வரியும் உள்ளது. மேலும், கட்டுமான பொருட்களுக்கு, மாநிலங்களின், ‘வாட்’ உள்ளிட்ட இதர வரிகளும் உள்ளன.கட்டுமான நிறுவனங்கள், இந்த வரிகளுக்கான கழிவை, ஒருங்கிணைந்த குடியிருப்பு திட்டத்தின் கீழ் செலுத்தும், மதிப்பு கூட்டு வரியில் கோர முடியாது. அதனால், அனைத்து வரிச் செலவுகளை எல்லாம் சேர்த்து தான், அவை, குடியிருப்புகளின் விலையை நிர்ணயிக்கின்றன. இத்துடன், குடியிருப்புகளுக்கு, தற்போது சேவை வரி, 4.5 சதவீதம் மற்றும் 1 சதவீத வாட் வரியும் உள்ளது.
கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 12 சதவீத சேவை வரி உள்ளது. அதேசமயம், கட்டுமான பொருட்களுக்கு செலுத்தப்பட்ட உள்ளீட்டு வரியை, நிறுவனங்கள் திரும்பப் பெறலாம். இதனால், கட்டுமான நிறுவனங்களின் வரிச் செலவினம், தற்போது உள்ளதை விட, வெகுவாக குறையும். இந்த ஆதாயத்தை, தற்போது கட்டுமான நிலையில் உள்ள குடியிருப்புகளை வாங்கியோருக்கு, கட்டுமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
பல நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., யில், வரி அதிகரிக்கும் என கூறி, வாடிக்கையாளர்களிடம், வரும், 30க்குள் முழு தொகையை செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அத்தகைய கட்டுமான நிறுவனங்கள் மீது, ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.