ஒலிம்பிக்ஸ் – மெக்டொனால்ட்ஸ் 50 ஆண்டுகால உறவு நிறைவு
ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பான்சர்ஷிப் வழங்கிவந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தங்களது முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், ஒலிம்பிக்ஸ் – மெக்டொனால்ட்ஸ் இடையேயான 50 ஆண்டு கால உறவு விரைவில் நிறைவடைய உள்ளது.
1968ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கிரீனோபிள் நகரத்தில் நடந்த குளிர்கால விளையாட்டு போட்டிகளின்போது, ஒலிம்பிக்ஸ்- மெக்டொனாலட்ஸ் உறவு துவங்கியது. 1976ம் ஆண்டில் அமெரிக்க கமிட்டியினரால், ஒலிம்பிக்ஸின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஷராக மெக்டொனால்ட்ஸ் அறிவிக்கப்பட்டது. அன்று முதல், அமெரிக்காவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பது மற்றும் அமெரிக்க விளையாட்டு நட்சத்திரங்களை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
1984ம் ஆண்டில், மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தனது புரோமோஷனல் வாசகத்தில் “எப்போது அமெரிக்கா வெற்றி பெறுகிறேதோ, அப்போதே நீயும் வெற்றி பெற்றவனாகிறாய்” என்று அமெரிக்காவை ஊக்குவிக்கும் விதங்களிலேயே செயல்பட்டு வந்தது.
இதனிடையே, வரும் 2018ம் ஆண்டில் தென்கொரியாவின் பியாங்சாங் நகரத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு ஒலிம்பிக் அடிப்படையிலான மெக்டொனால்ட் விளம்பரங்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒலிம்பிக் உடனான 50 ஆண்டுகால நட்பை நிறைவுசெய்ய உள்ளதாக மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுவாக்கில், இந்த நட்புறவு நிறைவடைய வாய்ப்புள்ளதாக துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.