தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’: கூடுதல் விபரம் கேட்டது மத்திய அரசு
தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள, ஐந்து மாவட்டங்களில் உள்ள, பள்ளி, கல்லுாரிகளின் விபரங்களை, மத்திய அரசு கேட்டுள்ளது.
‘தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்’ என, அறிவித்த மத்திய அரசு, அதற்கான இடங்களை பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டம் தோப்பூர்; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; புதுக்கோட்டை; ஈரோடு மாவட்டம், பெருந்துறை; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என, ஐந்து இடங்ளை, தமிழக அரசு பரிந்துரைத்தது.
அதில், தஞ்சாவூர் செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி, அந்த மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்ட சபை கூட்டத் தொடரிலும், இது தொடர்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ‘தமிழக அரசு அனுப்பிய விபரங்கள் போதவில்லை; கூடுதல் விபரங்களை அனுப்புங்கள்’ என, தமிழக அரசுக்கு, மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.
இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ள, ஐந்து இடங்களில் உள்ள, பள்ளி, கல்லுாரிகள், மக்களின் கல்வித்தகுதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட, பல்வேறு தகவல்களை கேட்டு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு கோரியுள்ள தகவல்களை தங்களுக்கு அனுப்பும்படி, ஐந்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விபரங்கள் கிடைத்ததும், விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.