‘காதலை தியாகம் செய்யும் இந்திய பெண்கள்’: சுப்ரீம் கோர்ட்
நம் நாட்டில், வெற்றி பெறாத காதல் கதைகள், சர்வ சாதாரணம்; பெற்றோர் எடுக்கும் முடிவுக்காக, பல பெண்கள், தங்கள் காதலை தியாகம் செய்கின்றனர்’ என, சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
விஷத்தன்மை :
ராஜஸ்தானில், 1995ல், 23 வயது பெண், தன் பெற்றோரின் கடும் எதிர்ப்பை அடுத்து, கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றில், காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தாள். விஷத்தன்மை உடைய, ‘காப்பர் சல்பேட்’ வேதிப் பொருளை இருவரும் உட்கொண்டனர். அதை, அதிகமாக சாப்பிட்ட பெண், வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தாள். குறைவாக வேதிப்பொருளை சாப்பிட்ட காதலன், உதவிக்கு அருகில் உள்ளவர்களை அழைக்கச் சென்றான். இந்த சந்தர்ப்பத்தில், அந்த பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மருத்துவ சிகிச்சையில் உயிர் பிழைத்த காதலன், பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், கைது செய்யப்பட்டான். அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை, ராஜஸ்தான் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், காதலன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
ஜாதி வேறுபாடு :
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு விபரம்: துாக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணும், குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும், ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஜாதி வேறுபாட்டால், அந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, பெண்ணின் தந்தை சாட்சி கூறி உள்ளார்.
தன் காதலியை, அவள் பெற்றோர், ஈவிரக்கமின்றி கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாக, காதலன் கூறியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட பெண், எப்படியாவது தன் காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணி இருப்பதற்கு சாத்தியம் உள்ளது.
அதேசமயம், தனக்கு கிடைக்காத பெண், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என, காதலன் நினைப்பதற்கும் சாத்தியம் உள்ளது. இந்த வழக்கில், உண்மையில் என்ன நடந்தது என்பது, சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும்; அவர்களில், பெண் இறந்து விட்டாள்; காதலன் வழக்கை எதிர்கொண்டுள்ளான்.
இந்த வழக்கில், காதலனுக்கு எதிரான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்ட காதலனை விடுவிக்கிறோம். பெற்றோர் எடுக்கும் முடிவுக்காக, பல பெண்கள், தங்கள் காதலை தியாகம் செய்கின்றனர். நம் நாட்டில், வெற்றி பெறாத காதல் கதைகள், சர்வ சாதாரணம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.