வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலையம்: செப்டம்பரில் பணிகளை தொடங்க திட்டம்
வண்டலூர் அருகே கிளாம்பாக் கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வெளியூர் செல்லும் பேருந்து களுக்காக கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கட்டியது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களுக்கும், வெளிமாநிலங் களுக்கும் இங்கிருந்துதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர அதே பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு பகுதியிலும் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தப் பணியை செய்து முடிக்கும் பொறுப்பு சிஎம்டிஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிளாம்பாக்கத் தில் 88 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ள சிஎம்டிஏ, முதல்கட்ட பணிகளை செய்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, செப்டம் பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அதன்பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
சிஎம்டிஏ கண்காணிப்புக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற் றது. அதில் கலந்துகொண்ட வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட அறிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து பேருந்து நிலையம் வரும் பகுதியில் பிற துறைகளின் கட்டுமானங்கள் ஏதேனும் வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துவருகி றோம். மேலும் பேருந்து நிலையத் துக்கான இணைப்புச் சாலைகள் வசதி குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் கோயம்பேடு பகுதியில் நெரிசல் வெகுவாக குறையும்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையவுள்ள பகுதிக்கு அருகில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பகுதி வருகிறது. விதிகளின்படி இந்த இடத்தில் கட்டுமானங்கள் செய்யக் கூடாது.
மேலும் இணைப்புச் சாலை அமைக்க வேண்டிய பகுதிகளில் தனியார் நிலங்கள் இருக்கின்றன. இதனால் பேருந்து நிலையம் அமைப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல்களைத் தீர்க்க சிஎம்டிஏ அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.