குழந்தைகள் அதிகம் விரும்பும் 5 பாராட்டுகள்!
குழந்தைகளின் மனவளத்துக்கு, பாராட்டுகள்தான் ஊட்டச்சத்து. வெற்றியோ, தோல்வியோ… அவர்களின் ஒவ்வொரு முயற்சியிலும் பெற்றோர்கள் தரவேண்டியது, ஊக்கப்படுத்தும் வார்த்தைகள். குழந்தை வளர்ப்பில் இவை எல்லாம் மிக முக்கியமானவை. அப்படி குழந்தைகளை உற்சாகப்படுத்தக் கூடிய முக்கிய ஐந்து பூஸ்ட் அப்களை சொல்கிறார், அரியலூரைச் சேர்ந்த மனநல ஆலோசகர் செல்வி அருள்மொழி.,
1. ”குழந்தை புதிதாக ஒரு செயலை முயற்சிக்கும்போது, அதில் அது தோல்வி அடைந்திருந்தாலும்கூட, ‘வெரி குட்! ஃபர்ஸ்ட் டைம்லயே இவ்ளோ சூப்பரா செய்திருக்கியே?! அடுத்த முறை இன்னும் பெஸ்ட்டா செய்வ பாரு!’ என்று பாராட்டுங்கள். அதுதான், அந்த புதிய கற்றலில், வெற்றி, தோல்வி தாண்டியும் அவர்களை தொடர்ந்து ஈடுபாடுகொள்ள வைக்கும் மந்திரம்.
2. குழந்தை ஏதாவது ஒரு போட்டியில் வெற்றிபெறும்போது, பாராட்டுகளுடன், அப்போது அவர்களிடம் தென்பட்ட சின்னச் சின்னத் தடுமாற்றங்களையும் சுட்டிக்காட்டுங்கள். ‘பேச்சுப்போட்டியில் உன் குரல்தான் கணீர்னு இருந்தது. ஆனா, ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாறின இல்ல… நெக்ஸ்ட் டைம் அதை சரிபண்ணிக்கோ’ என்று அவர்களை மெருகேற்றுங்கள்.
3. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்குமே ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசுவதை விரும்பவே மாட்டார்கள். இப்படிப் பேசுவதை குழந்தைகள் சுத்தமாக விரும்பமாட்டார்கள். எனவே, மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை எப்போதும் ஒப்பிடாதீர்கள். ஒருவேளை அவர்களாகவே, ‘அம்மா எனக்கு ஏன் அண்ணன் மாதிரி வரைய வரமாடேங்குது?’, ‘என் ஃப்ரெண்ட் அஸ்வினி ஹேர் ரொம்ப சில்கியா இருக்கும்மா’ என்று தங்களை ஒப்பிட்டுப் பேசும்போது, ‘ஆனா அண்ணா உன்ன மாதிரி சிந்தாம, மிச்சம் வைக்காம சாப்பிட மாட்டேங்கிறான் இல்ல?’ நீ சமர்த்துக்குட்டி!’, ‘அஸ்வினி ஹேர் உனக்கு ரொம்பப் பிடிக்கிற மாதிரி, அஸ்வினிக்கு உன் ஹேண்ட்ரைட்டிங்தான் ரொம்ப பிடிக்குமாம்.
அப்படி கடவுள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பெஸ்ட் விஷயங்கள் கொடுத்திருப்பார்’ என்று பேசி, குழந்தையிடம் உள்ள சிறப்பான விஷயங்களை அவ்வப்போது அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். இதனால், மற்றவர்களிடம் இருக்கும் ஒரு சிறப்பம்சம் தன்னிடம் இல்லையே என்று நினைக்கும் அந்தக் குழந்தையின் தாழ்வுமனப்பான்மை களையப்படும். அவர்களின் தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்கலாம்.
4. உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்று உங்கள் குழந்தையை அழைத்துச்செல்லும்போது, அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டுங்கள். ‘அவன் எப்பவுமே இப்படித்தான்… ஷூவை ரேக்லதான் வைப்பான், சாப்பிட்ட ப்ளேட்டை அவனே சிங்க்ல போட்டுடுவான்’ என்று சொல்லி, மற்றவர்களிடம் அவனுக்கு ‘குட்’ வாங்கிக் கொடுங்கள். பொது இடங்களில் இப்படி தங்கள் நல்ல பழக்கத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அதுபோன்ற நல்லொழுக்கங்களை அவர்கள் இன்னும் சிறப்பாக வளர்த்துக்கொள்வார்கள். பொது இடங்களில் இன்னும் சிறப்பாக நடந்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.
5. செய்த தவறை குழந்தைகள் ஒப்புக்கொள்ளும்போதும், அதற்கு மன்னிப்புக் கேட்கும்போதும் தவறாமல் பாராட்டுங்கள். ஒவ்வொரு பாராட்டும் அவர்களை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கக் கூடிய உத்தியாக அது அமையும். மேலும், உங்களுக்கும் குழந்தைக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ளும். ஒருவேளை அறியாமல் தவறு செய்யும்பட்சத்தில், அதை மறைக்காமல் உங்களிடம் சொல்லும் நேர்மையை அவர்களுக்குத் தரும்.” இவ்வாறு கூறினார் செல்வி அருள்மொழி.