யோகா ஆசிரியர்களுக்கு வரவேற்பு: பிரதமர் மோடி
இந்திய யோகா ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு நிலவி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
3வது சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. 150 உலக நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உ.பி., மாநிலம் லக்னோவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: ”கடந்த 3 ஆண்டுகளில் யோகா மையங்கள் அதிகரித்துள்ளன. யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய யோகா ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் யோகாவை கற்றுக்கொள்ள இந்தியர்களை எதிர்பார்க்கின்றனர். யோகா செய்வது உங்கள் உடல் நிலைக்கு எந்த செலவும் இல்லாமல் இன்சுரன்ஸ் செய்வது போலாகும்.” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா செய்தார்.
ஆமதாபாத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் மற்றும் அமித் ஷா கலந்து கொண்டு யோகா செய்து வருகின்றனர்.
புதுடில்லியில் நடந்து வரும் யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய நாயுடு மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர்.
கோவை ஈசா யோகா மையத்தில் நடந்து வரும் யோகா நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பாளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்து வரும் யோகா நிழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டுள்ளார்.