அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி
அமைச்சர்களை நீக்க துணைப் பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் உண்டு என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதையடுத்து அதிமுகவில் அதிகாரப் போட்டி வலுத்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக செயல்பட்டு வரு கின்றனர்.
இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கி யுள்ளார். அவரை 34 எம்எல்ஏக்கள் மற்றும் சில எம்பிக்கள் சந்தித்து ஆதரவு அளித்தனர்.
அதனால், தற்போது அதிமுகவில் 3-வது அணி உருவாகிவிட்டது. முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அமைச்சர்களையும் ஓபிஎஸ் அணி யினரையும் தினகரன் ஆதரவாளர் கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
சசிகலா, தினகரன் உள்ளிட் டோரை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் தினகரன் உள்ளிட்டவர் கள் ஒதுக்கிவைத்த முடிவில் மாற்றமில்லை என அமைச்சர்களும் தெரிவித்துவிட்டனர்.
நேற்று முன்தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தபின் நிருபர்களிடம் பேசிய மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, ‘‘அதிமுக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா. அவரை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’’ என்றார்.
அமைச்சரை நீக்க முடியும்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், ‘‘பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். அதனால், என்னிடமே அதிகாரங்கள் உள்ளன. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
அமைச்சர்கள் சிலர் அவ்வாறு கூறுவது, அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் விரைவில் கட்சி அலுவலகத்துக்கு சென்று பணியாற்றுவேன்’’ என்றார்.
ஆதரவு எம்எல்ஏ வெளிநடப்பு
தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் முதல்வருக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர். பேரவையில் பேசும்போது சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ நேற்று முன்தினம் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும் இதன் வெளிப்பாடாகவே உள்ளது.
அதிமுக (அம்மா) கட்சி சார்பில் சென்னையில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச் சிக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அழைக்கப்படவில்லை. ஆட்சி யையும், கட்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் கொண்டு வர முதல்வர் கே.பழனிசாமி முயற்சித்துவருவதாக அதிமுக வினரே கூறுகின்றனர்.
இந்நிலையில், தினகரனின் செயல்பாடுகள் அதிமுகவுக்குள் அதிகாரம் யாருக்கு என்ற போட்டி வலுத்து வருதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பேரவையில் செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.