அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி நாடுநாடாக சென்று சொகுசு வாழ்க்கை அனுபவித்தவர் கைது
மொன்டெனெக்ரோவின் இளவரசர் என்றும் தங்கள் குடும்பம் அல்பேனியாவிலும் செர்பியாவிலும் கூட ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாக எப்படி ஆட்சி செய்து வந்தது, யார் யார் ஆண்டனர் என்ற குறிப்புகள், ஓவியங்கள், புகைப்படங்களை புத்தகமாக போட்டு வைத்திருக்கிறார்.
பதக்கங்கள், முத்திரைகள், போர்க் கருவிகள் போன்றவற்றையும் தன்னுடைய பங்களாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு அதற்குரிய மரியாதை, வசதி, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
உலகப் பிரபலங்களுக்கு விருந்தும் விருதும் கொடுத்திருக்கிறார். பமீலா ஆண்டர்சன் கூட இவரிடமிருந்து, ’மொன்டெனக்ரோவின் சிறந்த பெண்மணி’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார்.
குறிப்பாக, ஐரோப்பா முழுவதும் சென்று தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்ப வைத்து, அனைத்து வசதிகளையும் அனுபவித்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தார்.
விடுதிக்கான கட்டணத்தை மொன்டெனெக்ரோ தூதரகத்துக்கு அனுப்பிவிடும்படி சொல்லிவிட்டார். ஆனால் தூதரகம் இப்படி ஓர் இளவரசர் தங்கள் நாட்டில் இல்லை என்றும் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரகசிய விசாரணை தொடங்கியது. அந்த நபர் கூறிய அத்தனை விஷயங்களும் பொய் என்று தெரியவந்தது.
போலி ஆவணங்கள், போலி முத்திரைகளைப் பயன்படுத்தி பல நாட்டினரையும் அவர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கும் அரசக் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இவரது உண்மையான பெயர் மவுரிஸ் அன்ட்ரோலி, இத்தாலியைச் சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்தார். அடிக்கடி புகைப்படங்களையும் அரசக் குடும்பத்து நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டார். இவரை இத்தாலி காவல் துறை கைது செய்துள்ளது.