தமிழக – கேரள எல்லையில் நக்சல் வேட்டை தீவிரம்
வட மாநிலங்களில் நக்சல்களின் நடவடிக்கைகளுக்கு, அதிரடிப் படையினர், ‘கிடுக்கி’ போடுவதால், அவர்கள் தென் மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதாகவும், தென் மாநிலங்களில் உள்ள நக்சல்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதாகவும், உளவுத் துறை கூறியுள்ளது. இதையடுத்து, தமிழக – கேரளஎல்லையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் தகவல் தெரிவிக்க, கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள கிராம மக்களிடம் நக்சல் நடமாட்டம் குறித்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சந்தேக நபர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் செய்து கொடுப்போரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோவை, நீலகிரி மாவட்ட காடுகளில் வனத்துறை, மாவட்ட போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்