Breaking News
மருத்துவ கவுன்சில் நிதி வீணடிப்பு : நிர்வாகிகள் மீது டாக்டர்கள் புகார்

மருத்துவ கவுன்சில் நிதியிலிருந்து பல லட்சம் ரூபாயை சொந்த தேவைகளுக்கு செலவு செய்து வருவதாக, முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது டாக்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில், அதன் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவ துணை தலைவர், பதிவாளர், உறுப்பினர்கள் உள்ளனர். 10 பேர் அடங்கிய உறுப்பினர் குழு, தங்களுக்குள் தலைவரை தேர்வு செய்கின்றன. இக்குழுவில் உள்ள, ஏழு பேரை கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்து தேர்வு செய்கின்றனர். மூன்று பேரை அரசு நியமிக்கிறது. மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் டாக்டர்களில், 1 லட்சம் பேர், கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். ஜூன், 19ல் கவுன்சிலின் பதவி காலம் முடிந்தது. தலைவர் பதவி குறித்த பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கவுன்சில் நிதியிலிருந்து, பல லட்சம் ரூபாயை சொந்த தேவைகளுக்கு செலவு செய்து வீணடித்து விட்டதாக, முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது டாக்டர்கள் புகார் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: தவறு செய்யும் டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, ஏழு பேர் அடங்கிய உறுப்பினர்களை தேர்வு செய்தோம்.ஆனால், கவுன்சிலின் ஐந்து ஆண்டுகளும் பிரகாசம், துரைராஜ், பாலகிருஷ்ணன், செந்தில் போன்றோர், தங்களுக்குள் பதவியை பங்கிட்டு கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையை தீர்ப்பதிலேயே போய் விட்டது.இதனை உறுதி செய்யும் விதமாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, தங்களுக்குள் பதவியை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் போட்டதாகவும், அதை, மற்றொருவர் மீறி விட்டதாகவும், முன்னாள் தலைவர் ஒருவரே, டாக்டர்கள் அனைவருக்கும், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல் பரப்பி வருகிறார்.பதவியை காப்பாற்றிக் கொள்ள, ஒருவருக்கு எதிராக ஒருவர் தொடரும் வழக்குகளுக்கு, கவுன்சில் நிதியை செலவிட்டு வருகின்றனர். அதற்கான வழக்கறிஞர்களாக தங்கள் உறவினர்களை நியமித்து, கட்டணமாக பல லட்சங்களை வழங்கியுள்ளனர்.சென்னைக்குள் இருந்து கொண்டே, கவுன்சில் அலுவலகத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், பயண செலவாக, 700 ரூபாய் செலவிட்டதாக கணக்கு எழுதி, பல ஆயிரம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலில் பல்வேறு பிரச்னைகள் நடந்தும், தமிழக அரசு, அதற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.