எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு வரும் 27-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: சுகாதாரத் துறை
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி (ஜூன் 27) முதல் எம்பிபிஎஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
22 மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு பிடிஎஸ் கல்லூரியிலும் மருத்துவ விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இதில் 2,66,221 மாணவர்கள், 3,45,313 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 6,11,539 பேர் (56.1 சதவீதம்) எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் வரும் 27-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. ஜூலை 7 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 8 கடைசி நாள்.
நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.