வடகொரியாவுக்குப் போட்டியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியாவுக்குப் போட்டியாக தென் கொரியாவும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பு, பொருளாதாரத் தடை களையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபகாலமாக அந்நாடு அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இதனால் தென் கொரியாவுக்குப் பாதுகாப்பாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை கடற்பகுதியில் நிறுத்தியது. ஆனாலும் தற்போது போர் மூளும் சூழல் சற்று தணிந்துள்ளது.
இந்நிலையில், வட கொரியாவுக்குப் போட்டியாக தென் கொரியாவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
தென் கொரிய அதிபர் மூன் ஜே முன்னிலையில் தென்மேற்கு கடற்பகுதியில் நேற்று ‘ஹியுன்மூ – 2’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்பின்னர் அதிபர் மூன் ஜே கூறியதாவது:
தென் கொரியாவின் பாது காப்பை ஏவுகணை சோதனை உறுதி செய்யும். ராணுவ வல்லமையை மேம்படுத்தினால் மட்டுமே வட கொரியாவை விஞ்ச முடியும். அதனுடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்த வும் இது உதவும். தென் கொரிய மக்கள் இதன்மூலம் பெருமை அடைவதுடன், பாது காப்பாக இருப்பதையும் உணர் வார்கள்.
இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு இணையானது. தென் கொரியா வலுவான ராணுவம் மற்றும் எதிர்காலத் திட்டங்களைக் கொண்டிருந்தாலும் வட கொரியாவைவிட பாதுகாப்பு திறனைக் கொண்டிருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பது சாத்தியமாகும்.
இவ்வாறு மூன் ஜே தெரிவித்தார்.
இந்த ஏவுகணை எவ்வளது தூரம் உள்ள இலக்கைச் சென்று தாக்கியது எனவும், துல்லியமாக எங்கிருந்து ஏவப்பட்டது என்ற தகவலையும் அதிபரின் செய்தித் தொடர்பாளர் பார்க் சூ ஹேயன் கூற மறுத்துவிட்டார்.