உ.பி. முதல்வராக 100 நாள்: சாதனைகளை பட்டியலிட்டு கையேடு வெளியிட்டார் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல்வராக 100 நாட்களை நிறைவு செய்ததை ஒட்டி மாநில அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு கையேடு ஒன்றை வெளியிட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
100 நாட்கள் நம்பிக்கைக்கு (100 din vishwas ke) என்று அந்த கையேட்டுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கையேட்டை வெளியிட்டுப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “உத்தரப் பிரதேச மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் பணிகளை அரசு தொடங்கிவிட்டது என்பதை மக்களுக்கு உறுதிபடுத்துகிறோம்” என்றார்.
முந்தைய சமாஜ்வாதி ஆட்சி விட்டுச்சென்ற மோசமான நிர்வாகத்தை சீர் செய்ய தங்களுக்கு சில காலம் அவகாசம் தேவைப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவரது அமைச்சரவை சகாக்களும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 100 நாட்களில் மக்களுக்காக அரசு செய்துள்ள நன்மைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து..
ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின்னர், அம்மாநிலத்தின் அரசு உயரதிகாரிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். மாநில தலைமைச் செயலகத்தில் காலை 9.25-க்கு முன்னதாகவே வாகன நிறுத்துமிடத்தில் அதிகாரிகளின் வாகனங்கள் நிற்பது அவர்கள் துரிதகதியில் பணியில் ஈடுபட்டிருப்பதற்கு ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாம் மாநில அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளுடன் தினமும் முதல்வர் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இவையெல்லாம் உ.பி.யை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் யோகி ஆதித்யநாத்தின் செயல்திறன் என அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.