அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்: உலகத் தலைவர்கள் இரங்கல்
அமெரிக்காவின் ஆதிக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாக எதிர்த்து வந்த கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக கால மானார். அவருக்கு வயது 90. காஸ்ட்ரோவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த தலை வர்களில் குறிப்பிடத்தக்கவர். சோவியத் யூனியன் பாணியில் கம்யூனிஸத்தை ஆதரித்தவர் காஸ்ட்ரோ. கடந்த 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை கியூபா அதிபராக இருந்தார். சுமார் 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். அதன்பின் வயது மூப்புக் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். இத்தகவலை அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தழுதழுத்த குரலில் அறிவித் தார். ரவுல் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு 10.29 மணிக்கு கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்’’ என்றார்.
இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளனர்.
அமரிக்காவின் புளோரி டாவில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் தனித் தீவாக உள்ள நாடுதான் கியூபா. இந்த நாட்டை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர அமெரிக்கா பல வழிமுறைகளை கை யாண்டது. கியூபா மீது பொரு ளாதார தடை விதித்தது. கியூபாவின் முக்கிய ஆதார மாக இருந்த சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. கியூபாவுடனான வர்த்தகத்துக்கும் தடை கொண்டு வந்தது. கடந்த 1961-ம் ஆண்டு தூதரக உறவையும் முறித்துக் கொண்டது.
எனினும், சொந்த நாட்டின் வளங்களை மட்டுமே கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கே சேரும். அதற்காக கடந்த 49 ஆண்டுகளாக அமெரிக் காவின் 10 அதிபர்களை பகைத்துக் கொண்டே கியூபாவை வழி நடத்தினார்.
இதனால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 600-க்கும் மேற்பட்ட முறை முயற்சிகள் நடந்தன. அத்தனை முயற்சி களும் திறம்பட முறியடிக்கப்பட்டன. அமெரிக்காவின் பிடியில் இருந்து கியூபா விடுவிக்கப்பட்ட போது அதன் அதிபராக புல்ஜென்சியோ படிஸ்டா பொறுப்பேற்றார். அவரது சர்வாதிகார ஆட்சியால் மக்கள் கொதித்தெழுந்தனர். அவர்களை வழிநடத்தி வெற்றி பெற்ற வர்தான் ஃபிடல் காஸ்டரோ. அதன்பின், புரட்சி மூலம் 1959-ம் ஆண்டு படிஸ்டாவை விரட்டிவிட்டு கியூபாவின் ஆட்சி பொறுப்பை ஏற்றார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 32. லத்தீன் அமெரிக்காவின் இளம் தலைவர் அவர்தான்.
பதவிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தினார். கடந்த 1960-களில் ஆப்பிரிக்காவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்களாக செயல்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக போரிட தனது படைகளை அனுப் பினார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதே நேரத்தில் வெளிநாடுகளில் உள்ள ஏழை களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்களையும் அனுப்பி வைத்தார். சோவியத் யூனியன் சிதைந்த பிறகு கியூபாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதன் பிறகு சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் கியூபாவின் பொருளாதாரம் மீண்டது.
கியூபாவில் கடந்த 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ மதப் பள்ளியில் படித்தார். பின்னர் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் சமூக அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன்பிறகு அரசியலில் ஆர்வம் கொண்டு கியூபாவில் இயங்கி வந்த புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அவரது புரட்சி நடவடிக்கைகள் கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கியது. ஃபிடல் காஸ்ட்ரோவும், ரவுல் காஸ்ட் ரோவும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
சிறையில் இருந்து விடுதலை யான பிறகு மெக்சிகோவுக்கு சென்றார். அங்கிருந்து புரட்சிப் படையை உருவாக்கிக் கொண்டு 1956-ம் ஆண்டு மீண்டும் கியூபா திரும்பினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு படிஸ்டாவை எதிர்த்து மக்கள் கிளர்ந்து எழுந்த போது ஹவானாவுக்குள் நுழைந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதுவே மக்கள் ஆதரவுடன் அவர் ஆட்சியைப் பிடிக்கவும் வழி ஏற்படுத்தித் தந்தது.
சொந்த வாழ்க்கை
மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ வின் முதல் மனைவி மிர்தா டயாஸ் பலார்ட். இவருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 1956-ம் ஆண்டு மிர்தாவை விவாகரத்து செய்தார் காஸ்ட்ரோ. அதன்பிறகு 40 ஆண்டு காலம் டாலியா சோடோ வேல்லி என்பவருடன் வாழ்ந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர்.
9 நாட்கள் துக்கம்
கியூபா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும். வரும் டிசம்பர் 4-ம் தேதி சான்டியாகோ டி கியூபா நகரில் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு நடைபெறும். அவரது அஸ்தி கியூபா முழுவதும் தூவப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது