கிடாம்பி ஸ்ரீகாந்த் – பாட்மிண்டன் உலகின் புதிய இளவரசன்
இந்திய பாட்மிண்டன் உலகுக்கு புத்துயிர் கொடுத்த ஆண்டு என்று 2001-ம் ஆண்டைச் சொல்லலாம். அந்த ஆண்டில் நடந்த ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கோபிசந்த், சாம்பியன் பட்டத்தை வெல்ல, பல சிறுவர் சிறுமியர்கள் பாட்மிண்டன் ராக்கெட்டைத் தூக்கினார்கள். கோபிசந்த் வழியில் தாங்களும் உலக சாம்பியன் ஆகலாம் என்று கனவு கண்டார்கள். அப்படி கனவு கண்டு சாதித்த சாய்னா நெவால், பி.வி.சிந்து வரிசையில் தோன்றியவர்தான் கிடாம்பி ஸ்ரீகாந்த். இந்திய பாட்மிண்டன் உலகின் புதிய இளவரசன்.
2001-ல் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கோபிசந்த் வெல்வதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் வயது 8. அப்போதுதான் அவரது அப்பா கிருஷ்ணா, ஸ்ரீகாந்துக்கு ஒரு பாட்மிண்டன் ராக்கெட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். மாவட்ட அளவிலான பாட்மிண்டன் போட்டிகளில் ஆடும் தனது அண்ணன் நந்தகோபால் மூலம் அவருக்கு இப்போட்டி அறிமுகமாகி சில மாதங்களே ஆகியிருந்தன. இறுதிப் போட்டியில் வென்று கோபிசந்த், சாம்பியன் ஆனதும் பாட்மிண்டன் மீதான ஸ்ரீகாந்தின் காதல் அதிகமானது.
இது நடந்து 6 மாதங்களுக்கு பிறகு ஸ்ரீகாந்தையும், அவரது அண்ணன் நந்தகோபாலையும், குண்டூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார் அவர்களின் தந்தை கிருஷ்ணா. பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக கோபிசந்துக்கு நடந்த பாராட்டு விழாதான் அந்த நிகழ்ச்சி. ஒரு போட்டியில் வென்றால் இத்தனை புகழைப் பெற முடியுமா என்ற ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் ஸ்ரீகாந்தும் அவரது அண்ணனும்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும், “நீங்களும் கோபிசந்த் போல் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியுமா?” என்று தந்தை கேட்க, “நிச்சயமாக வருவேன் அப்பா” என்று உறுதியுடன் சொன்னார் ஸ்ரீகாந்த். பொதுவாக யாராவது சாதித்துவிட்டால் தந்தையர்கள், மகன்களைப் பார்த்து ‘அவர்களைப் போல் நீயும் சாதிப்பாயா?” என்று கேட்பதும், அதற்கு மகன்கள் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை அளிப்பதும் அடிக்கடி நடக்கும் விஷயங்கள்தான். அதற்குப் பிறகு பெரும்பாலான தந்தையரும், மகன்களும் அதை மறந்துவிடுவார்கள். அடுத்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால் ஸ்ரீகாந்தும், அவரது தந்தையும் அப்படி இருக்கவில்லை. தன் மகன்களுக்கு பாட்மிண்டனில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதை அவர்கள் ஆடும் விதத்தில் இருந்து புரிந்துகொண்ட, அவர்களின் அப்பா கிருஷ்ணா, முதலில் ஸ்ரீகாந்தின் அண்ண னான நந்தகோபாலை விசாக பட்டினத்தில் உள்ள ஆந்திர விளையாட்டு ஆணையத்தில் சேர்த்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஸ்ரீகாந்தையும் அங்கு சேர்த்துள்ளார்.
இதனால் வீட்டில் பிரச்சினை. 2 மகன்களையும் வீட்டில் இருந்து பிரித்து விளையாட்டு விடுதியில் சேர்த்துவிடுவதற்கு ஸ்ரீகாந்தின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தார். குறைந்தபட்சம் ஸ்ரீகாந்தையாவது தன்னுடன் வீட்டில் இருக்க விடவேண்டும் என்று மன்றாடினார். ஆனால் ஸ்ரீகாந்தின் அப்பா இதற்கு சம்மதிப்பதாக இல்லை.
முதலில் விசாகபட்டினத்திலும், பின்னர் கம்மத்திலும் பயிற்சி பெற்ற ஸ்ரீகாந்தை 15 வயதில் கோபிசந்திடம் ஒப்படைத்தார் அவரது தந்தை. ஏற்கெனவே சிறந்த வீரராக இருந்த ஸ்ரீகாந்தை, கோபிசந்தின் பயிற்சி மேலும் கூர்தீட்டியது. ஆரம்ப காலத்தில் ஒற்றையர் போட்டிகளை விட இரட்டையர் போட்டிகளில்தான் ஸ்ரீகாந்த் அதிக ஆர்வம் காட்டிவந்தார். அவரது வேகத்தையும் ஆற்றலையும் கண்ட கோபிசந்த், ஒற்றையர் போட்டிகளிலும் ஸ்ரீகாந்தால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். இதைத் தொடர்ந்து அவர் ஒற்றையர் போட்டிகளில் கவனத்தை திருப்பினார்.
“ஸ்ரீகாந்த் ஒரு புத்திசாலித்தன மான வீரர். அத்துடன் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர். எதையும் மிக விரைவாக கற்றுக்கொள்வார். அவரது ஆட்ட நுணுக்கத்தை எதிராளிகளால் அத்தனை சீக்கிரம் புரிந்துகொள்ள முடியாது. இந்த திறமைகள்தான் அவர் வெற்றிகளைக் குவிக்க உதவுகின்றன” என்கிறார் அவரது பயிற்சியாளர் கோபிசந்த்.
உலக அளவில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இப்போது ஜொலிக்கத் தொடங்கியிருக்கும் இவர், இந்திய அளவில் சிறந்த வீரராக அறிமுகமானது 2012-ம் ஆண்டில்தான். அந்த ஆண்டில் நடந்த தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும், அவரது சகோதரர் நந்தகோபாலும் அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறியது பலரது புருவத்தை உயர வைத்தது. ‘குண்டூர் சகோதரர்கள்’ என்ற பெயரில் இவர்கள் பெயர் பரவத் தொடங்கியது இதன் பின்னர்தான். இதில் அண்ணனான நந்தகோபால் தேசிய அளவுடன் நின்றுகொள்ள, அவரைப் பார்த்து பாட்மிண்டன் ஆடவந்த தம்பி கிடாம்பி ஸ்ரீகாந்த், சர்வதேச அளவில் இப்போது இந்தியாவின் கொடியை தாங்கிப் பிடிக்கிறார்.
தேசிய அளவில் தொடர்ந்து வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 2014-ம் ஆண்டு சிறு சோதனை ஏற்பட்டது. கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்ட அவர், குளியலறையில் மயங்கி விழுந்தார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமானார். இதன் பின் புத்துயிர் எடுத்த ஸ்ரீகாந்த், ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம், 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக லின் டானிடம் தோல்வி அடைய, பதக்க வாய்ப்பு நூலிழையில் கைநழுவியது. இதே ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வெல்ல, இந்தியாவே சிந்துவைக் கொண்டாடியது. அதேநேரத்தில் இந்த ஒலிம்பிக்கில் கால் இறுதிவரை முன்னேறிய ஸ்ரீகாந்தின் ஆற்றலை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இதனால் ஸ்ரீகாந்த் துவண்டு போகவில்லை. முன்பை விட அதிக ஆற்றலுடன் திரும்பிவந்தார். தன் குருநாதர் கோபிசந்திடம் மேலும் சில வித்தைகளை கற்று 2017-ல் வெல்ல முடியாத வீரராக மீண்டுவந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அவர் அதில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் சளைக்காமல் போராடி இம்மாதம் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன், ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் ஆகியவற்றில் சாம்பியனாக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
கடந்த 3 வாரங்களில் 2 சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இவர், ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டனில் ஒலிம்பிக் சாம்பியனையே மண்ணைக் கவ்வ வைத்தது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டில் பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 240-வது இடத்தில் இருந்த இவர் தற்போது 11-வது இடத்தில் இருக்கிறார். மேலும் முன்னேறி முதல் இடத்தைப் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் ஸ்ரீகாந்த். அவரது கனவுகள் நிறை வேறட்டும்!
அதிகாலை 4.30க்கு பயிற்சி
கோபிசந்திடம் ஸ்ரீகாந்த் பயிற்சி பெறச் சென்றபோது, அவர் காலை 6 மணிக்கு சீனியர் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அதனால் ஸ்ரீகாந்துக்கு தினமும் காலை 4.30 மணிக்கு பயிற்சி அளித்துள்ளார். “தினமும் காலை 4.30-க்கு பயிற்சிக்கு செல்ல வேண்டுமானால் காலை 3.30க்கு எழ வேண்டி இருந்தது. அது எனக்கு முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் கோபிசந்த் சாரைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பயிற்சி அளிக்கும் அவரே அத்தனை சீக்கிரம் எழுந்திருக்கும்போது பயிற்சி பெறும் நான் எழுந்திருப்பதில் சோம்பேறித்தனம் காட்டக்கூடாது என்று நினைத்தேன். அதிலிருந்து பயிற்சிக்கு ஒரு நாள்கூட தாமதமாக போனதில்லை” என்கிறார் ஸ்ரீகாந்த்.