ப்ரோ கபடி லீக் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது: சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறும்
இந்தியாவில் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ப்ரோ கபடி லீக் போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றன. இந்த போட்டி யின் 5-வது சீசன் வரும் ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெறும் ப்ரோ கபடி லீக் போட்டியில் பங்குபெறும் 12 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பல்டான், யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்சூன் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புள்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை மாதம் 28-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியு டன் தமிழ் தலைவாஸ் அணி மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள 12 நகரங்களில் கபடி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சென்னையில் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும். ப்ளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் சென்னையிலும், மும்பையிலும் நடக்கும். இறுதிப் போட்டி சென்னையில் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. சென்னையில் நேரு உள் விளை யாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும்.
ப்ரோ கபடி போட்டிகளின் ஆணையாளரான அனுபம் கோஸ்வாமி இதுபற்றி கூறும் போது, “இம்முறை 12 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் ப்ரோ கபடி லீக்கில் இடம்பெற உள்ளன. 3 மாதங்கள் நடக்கும் இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்” என்றார்.