செய்யது குழும நிறுவனத்தில் வருமான வரி சோதனை: சென்னை உட்பட 40 இடங்களில் நடந்தது
செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 200 பேர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருநெல்வேலியை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி குழும நிறுவனம். இந்த குழுமத்தின் சார்பில் நிதி நிறுவனம், வர்த்தக நிறுவனம், காட்டன் மில்ஸ், ஹோம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு திருநெல்வேலி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள செய் யது பீடி குழும நிறுவனங்களின் அலுவலகங்கள், குடோன்கள், வீடுகள் என 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செய்யது பீடி நிறுவனத்தின் உரிமையாளர் யூசுப் மீரானின் வீடு, திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகம், குடோன், வடசென்னை சாத்தாங்காடு தொழிற்சாலை ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
காலை 7 மணி முதல்..
திருநெல்வேலி வண்ணார பேட்டையில் உள்ள செய்யது பீடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மேலப்பாளையத்தில் கம்பெனி, குடோன், மூலக்கரைப் பட்டி பகுதிகளில் உள்ள பஞ் சாலைகள், திருநெல்வேலி ஜங்சன் பகுதியில் உள்ள செய்யது லாட்ஜ், கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள செய்யது பீடி கிளை நிறுவனம், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இது வழக்கமான சோதனைதான். கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தேவையெனில் விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.