வாக்காளர் பட்டியலில் இல்லாத 40% இளைஞர்கள்
நாடு முழுவதும் ஓட்டளிக்கும் தகுதியுடைய 18 முதல் 19 வயதுடைய 40 சதவீதம் புதிய இளைஞர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கில், அதிகபட்சமாக, உ.பி.,யில் 75 லட்சம் மற்றும் பீகாரில் 46 லட்சம் இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுடைய 3.36 கோடி இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உ.பி., பீகார், மகாராஷ்டிரா, ம.பி., கேரளா, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானவர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறுகையில், வாக்காளர் பட்டியலில் இவர்களை இணைத்துக் கொள்வதற்காக ஜூலை 1 முதல் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளோம். தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில், இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்த்துக் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. ஆனால் இதுவரை பெரும்பாலான இளைஞர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.