வடஇந்தியாவில் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மகாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி, அரியானா, அசாம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெய்த கனமழையால், மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு தெருக்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இருசக்கர வாகனத்தை மீட்க முயன்ற ஒருவரும் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோவும் வெளியோகி, வைரலாக பரவி வருகிறது. பிகானெர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துள்ளதால், வீடுகள், வணிக நிறுவனங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழையால், பல்வேறு தடுப்பணைகள் நிரம்பி, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
மோர்பி மாவட்டத்தில் உள்ள தங்க்ரா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 280 மில்லி மீட்டர் மழை பெய்ததால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதையடுத்து, அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் டில்லி, பஞ்சாப், அசாம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.