கலாம் நினைவு மண்டபம்: ஜூலை 27ல் திறப்பு விழா
ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவு மண்டபம் கட்டுமான பணி நிறைவு பெற உள்ளது. ஜூலை 27 ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு நினைவு மண்டபம், அறிவுசார் மையம் அமைக்க மாநில அரசு கூடுதல் நிலம் ஒதுக்காமல், இழுத்தடித்ததால் ஓராண்டாக கட்டுமான பணி துவங்கவில்லை. இதன்பின் நினைவிடம் இருந்த 2.4 ஏக்கரில் ரூபாய் 15 கோடியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாடு அமைப்பு நினைவு மண்டபம் கட்டுமான பணியை கடந்த அக்.,15ல் துவக்கியது.
பசுமை மண்டபம் :
அப்துல்கலாம் 2ம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 27 அன்று மண்டபத்தை திறப்பதற்கு ஜூலை 7 க்குள் கட்டுமான பணி முடிக்க ராணுவ அதிகாரிகள் ‘இலக்கு’ நிர்ணயித்து கடந்த 8 மாதமாக இரவு பகலாக பணி நடந்து, முடிவுறும் தருவாயில் உள்ளது. கலாமின் ‘பசுமை கனவு’ நனவாக்கும் விதமாக ஆந்திரா ராஜமுந்திரியில் இருந்து கொண்டு வந்த ஆயிரம் அழகு செடிகள், நிழல் தரும் மரங்களை நினைவு மண்டபம் சுற்றி ஊன்றி, அழகுபடுத்தினர்.
மேலும் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கிரானைட் கற்களால் நினைவு மண்டபத்தை அலங்கரித்து தற்போது பளீச் என ஜொலிக்கிறது. மண்டபத்தில் மின் அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இந்த நினைவு மண்டபத்தை ஜூலை 27 ல் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.