1962-ம் ஆண்டு போருக்குப் பிறகு 1 மாதமாக நீடிக்கும் மோதல்: இந்திய – சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம்
இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் முச்சந்திப்பில் டோகா லா பகுதி உள்ளது. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்று மாறு சீன ராணுவம் கேட்டுக் கொண் டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.
எனினும், 6-ம் தேதி இரவு இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவம் புல்டோசர்கள் மூலம் அந்த 2 பதுங்கு குழிகளையும் சேதப் படுத்தியதுடன், அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
டோகா லா பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியா வுக்கோ பூடானுக்கோ உரிமை இல்லை என்றும் சீனா தெரிவித்தது. இதையடுத்து, அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்டு எந்தப் பணியையும் செய்ய விடா மல் சீன ராணுவத்தை தடுத்து நிறுத் தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு அருகே உள்ள முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் 8-ம் தேதி அங்கு விரைந்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து இருதரப்பு ராணுவமும் எல்லையில் கூடுதல் வீரர்களை குவித்தன.
மேலும் இந்திய ராணுவம் சீனாவுக்குள் அத்துமீறி ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியது. இதனால் கடந்த 1 மாதமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவுவது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு, 2013-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே உள்ள தவ்லத் பெக் ஓல்டி பகுதி யில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே அதிகபட்சமாக 21 நாட்கள் மோதல் போக்கு நிலவியது. அப்போது இந்திய பகுதிக்குள் 30 கி.மீ. ஊடுருவிய சீன ராணுவம் தெப்சாங் பகுதிக்கு சொந்தம் கொண்டாடியது. எனினும் இந்திய ராணுவத்தின் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது.
1962 போருக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இந்திய ராணுவமும், இந்தோ திபெத் எல்லை போலீஸும் (ஐடிபிபி) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சர்வதேச எல் லையிலிருந்து 15 கி.மீ. தொலை வில் முகாம் அமைக்கப்பட்டது.
இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை யடுத்து, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கொடி அமர்வு கூட்டம் நடத்தினர். அப்போது, லால்டன் பகுதியிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது. இதை இந்தியா ஏற்கவில்லை.
இதனிடையே, சிக்கிம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 47 யாத்ரீகர்களுக்கு சீன ராணுவம் அனுமதி மறுத்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
இந்தியா-பூடான் எல்லையில் நடைபெறும் செயல்களை கண்காணிப்பதற்கு வசதியாக டோகா லா பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாட முயற்சிப்பதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் வு.கியான் கூறும்போது, “1962-ல் நடந்த போரிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்” என்றார். இதற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறும் போது, “1962-ல் இருந்த நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு” என்று பதிலடி கொடுத்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் 3,488 கி.மீ. தூரத்துக்கு இந்திய சீன எல்லை அமைந்துள்ளது. இதில், 220 கி.மீ. எல்லை சிக்கிம் மாநிலத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய வரைபடத்தை வெளியிட்டு சொந்தம் கொண்டாடும் சீனா
எல்லையில் உள்ள டோகா லா பகுதியை டாங்லாங் என அழைக் கும் சீனா, அந்தப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறது. இந்தப் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு ஆதாரமாக 127 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரைபடத்தையும் சீன வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
அதாவது சிக்கிம் திபெத் எல்லை தொடர்பாக, 1890-ம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டன் – சீனா இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டன் கவர்னர் லான்ஸ்டவுனும், சீனாவின் லெப்டினன்ட் கவர்னர் ஷெங் தாயும் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் 2 புகைப்படங்களையும் சீனா வெளியிட்டுள்ளது. சீனா பகுதிக்குள் இந்திய ராணுவம் இருப்பது போல அதில் சித்தரிக்கப் பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் இந்தியாவின் 2 புல்டோசர்களும் மற்றொன்றில் 1 புல்டோசரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
50 ஆண்டுக்கு முன்பே ஊடுருவிய சீனா
இந்தியா சீனா இடையே இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கு காரணமான, பூடானுக்கு சொந்தமான டோகா லா பகுதியில் 1966-ம் ஆண்டு சீனா ஊடுருவியது. இதைத் தடுக்க பூடான் இந்தியாவின் உதவியை நாடியது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இதற்கு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து 1966-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இந்திரா காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூடானை பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் சீனாவின் ஊடுருவலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இந்திரா காந்தி மீது சீனா ஆத்திரமடைந்தது. இதனால் அப்போதும் சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது.
இதன்மூலம் டோகா லா பகுதி தொடர்பாக பூடானுக்கும் சீனா வுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவது உறுதியாகி உள்ளது.