ஊடகங்கள் மீது பாய்ச்சல்: அமெரிக்க அதிபரால் சர்ச்சை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஊடகங்களை கடுமையாக விமர்சித்து, சமூகவலை தளங்களில் கருத்து வெளியிட்டு வருவதற்கு எதிர்கட்சியினரும், ஊடகத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், ஜனவரியில் பதவியேற்றார். தேர்தலில் போட்டியிட்டபோது, அவரது செயல்பாடுகளை, அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.
இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய உளவுதுறையினர் டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஹிலாரி புகார் தெரிவித்தார்; இந்த விவகாரத்திலும், அமெரிக்க ஊடகங்கள், டிரம்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன.
இதனால், டிரம்ப் பதவியேற்றது முதலே, அந்நாட்டு ஊடகங்களை, அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். ‘அமெரிக்க ஊடகங்கள் பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. வேண்டுமென்றே தவறான
தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றன’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், குத்து சண்டை போட்டியில், அமெரிக்க ஊடகவியலாளரை, தான் தாக்குவது போன்று, உருவாக்கப்பட்டுள்ள, ‘வீடியோ’ காட்சி ஒன்றை, டிரம்ப், தன், ‘டுவிட்டர்’ சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம், அங்கு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, எதிர்கட்சியினரும், ஊடகவியலாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் அதிபரின் செயல்பாடுகளை விமர்சிப்பது ஊடகங்களின் கடமை; தவறுகளை சுட்டி காட்டுவது, ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், டிரம்ப் இதை உணராமல், ஊடகவியலாளர்களை மிக மோசமாக விமர்சித்து வருகிறார்.
நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோதும், ஊடகங்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது; இருப்பினும் பொதுதளத்தில், அவர் ஊடகங்களை விமர்சித்ததில்லை. அமெரிக்க அதிபர்கள் யாரும் இதுவரை செய்யாத அளவு, டிரம்ப், மிகமோசமாக நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர்கள்
கூறியுள்ளனர்.