சவுதி விதித்த நிபந்தனை: பதிலளித்தது கத்தார்
கத்தார் மீதான தடையை விலக்கிக் கொள்ள, சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் விதித்த நிபந்தனைகளுக்கு, கத்தார் நேற்று பதிலளித்தது. மேற்காசிய நாடான கத்தார், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, அந்நாட்டுடனான துாதரக உறவை, மற்ற வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை துண்டித்தன.துாதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள், கத்தாருடனான விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தையும் ரத்து செய்தன. இதனால், மேற்காசியாவில் நெருக்கடியான சூழல் உருவானது. கத்தாருக்கும், மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்ய, குவைத் முயன்று வருகிறது.இதையடுத்து, கத்தாருடனான தடையை நீக்க, அல் ஜஸீரா, ‘டிவி’ சேனலை மூடுவது, ஈரானுடனான உறவை துண்டிப்பது உள்ளிட்ட, 13 நிபந்தனைகளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விதித்தன. இதற்கு பதிலளிக்க, கத்தாருக்கு விதிக்கப்பட்ட கெடு, நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்தது.
எனினும், குவைத் தலையிட்டு, சவுதி அரேபியாவுடன் பேசி, இரண்டு நாட்கள் அவகாசம் பெற்று தந்தது. இதை தொடர்ந்து, குவைத் மன்னர் ஷேக் ஷபா – அல் – அகமதுவை, கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் நேற்று சந்தித்தார்.
அப்போது, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விதித்த நிபந்தனைகளுக்கு உரிய பதில்கள் அடங்கிய கடிதத்தை, அவரிடம் ஒப்படைத்தார். எனினும், அதில் இடம் பெற்றுள்ள விபரங்கள் வெளியாகவில்லை.
முடிவு எப்போது?
எகிப்து தலைநகர் கெய்ரோவில், நாளை, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, கத்தார் மீதான தடை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில், குவைத் வெளியுறவு அமைச்சர், அப்துல் ரஹ்மான் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கத்தார் அளித்துள்ள பதில் அடங்கிய கடிதத்தை, நான்கு நாடுகளிடம் அவர் அளிப்பார் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு பின், கத்தார் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தெரிய வரும்.