Breaking News
மிகப்பெரிய வீரர்கள் இருந்த போது செய்ய முடியாததை தற்போதைய இந்திய அணி சாதித்து காட்டி இருக்கிறது

கடந்த காலங்களில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தபோது செய்ய முடியாததை தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சாதித்து காட்டி இருக்கிறது என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

2–வது டெஸ்ட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

ரவிசாஸ்திரி பேட்டி

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்கள் இப்போது நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய இந்திய அணிகளில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தும் செய்ய முடியாததை தற்போதைய இந்திய அணி ஏற்கனவே சாதித்து காட்டி இருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் 2015–ம் ஆண்டில் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் பலமுறை இலங்கைக்கு சென்று விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஒருபோதும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. தற்போதைய இந்திய அணி அதனை செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் முந்தைய இந்திய அணிகள் செய்யாததை ஏற்கனவே இந்த இந்திய அணி செய்ய தொடங்கி விட்டது.

மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பார்

விராட்கோலி இன்னமும் இளைஞர் தான். டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அவரை நான் கேப்டனாக பார்த்ததற்கும், தற்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன் பதவியை வகித்த போது நான் அங்கு இருந்தேன். தற்போது 27 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்து இருக்கிறார். எனவே பெரிய வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து எவ்வளவு முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என்பது தெரியும். அவர் தொடர்ந்து முதிர்ச்சி பெறுவார். அவருடைய வயதுக்கு அவர் நிறைய பங்களிப்பை செய்து இருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அறிகுறி தெரிகிறது.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாட்டு தொடர்கள் வருகின்றன. இவை மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அவற்றை நான் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த இந்திய அணி, மற்ற இந்திய அணிகள் செய்யாததை செய்து காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.