Breaking News
85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி

துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன்னும் 5 மொழிகளில் பாட கற்றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.

இந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

அடுத்த மாதம் 29-ந் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

முதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர்தான் துபாய்க்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பானிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித்தது. அதை கற்றேன். வழக்கமாக 2 மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன்னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற்றுக்கொண்டு விடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரைப் பொருத்தவரையில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.