Breaking News
காங்கோ நாட்டில் சரக்கு ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்து 33 பேர் சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு உள்ள கட்டாங்கா என்கிற மாகாணம் கனிம வளம் மிக்க மாகாணமாக திகழ்கிறது.  இந்த மாகாணத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு எண்ணெய் வகைகள், எரிபொருட்கள் உள்ளிட்டவை சரக்கு ரெயில்களில் எடுத்து செல்லப்படுகிறது. இந்த சரக்கு ரெயிலில் சட்டவிரோதமாக பயணம் செய்வதை அங்கு உள்ள மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

சம்பவத்தன்று கட்டாங்கா மாகாணத்தின் லுபும்பாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு, 13 டேங்கர்களில் எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. வழக்கம்போல் இந்த சரக்கு ரெயிலில் ஏராளமான மக்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தனர்.

இந்த ரெயில், லுபாடி ரெயில் நிலையத்துக்கு அருகே சாய்வான பகுதியில் அமைந்து உள்ள ஏற்றத்தில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது.  அந்த ரெயில் அருகில் உள்ள மிக ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டேங்கர்களில் இருந்த எரிபொருள் கசிந்து, ரெயில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர சம்பவத்தில் ரெயிலில் சட்டவிரோதமாக பயணம் செய்த 33 பேர் உடல் கருகி உயிர் இழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரெயிலில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தார்கள், விபத்தில் யாரும் காயங்களுடன் உயிர் தப்பினார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை.  கடந்த 2014–ம் ஆண்டு, இதே மாகாணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 136 பேர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.