Breaking News
சங்கராச்சாரியாரின் இறுதி நிமிடங்கள்

மாசி 16 – பிப் 28 – 2018:

காலை 5:30 மணி: வழக்கம் போல் விடிந்தது காலை. காஞ்சி மடம் இயல்பான பரபரப்புடன் செயல்பட துவங்கியது. அவர்களுக்கு தெரியவில்லை அன்று ஒரு இடி இறங்கப்போகிறது என்று! முதல் நாள் இரவு ப்ருஹ்மோத்சவத்தில் குதிரை வாகனத்தில் வந்த காமாட்சியை ஊர்வலத்தில் வந்து சேவித்துவிட்டு, வழக்கம் போல் நித்திய கடமையாய் தான் செய்யும் குரு வந்தனத்திற்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் சமாதிக்கு வந்தார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வந்தனத்தை முடித்துவிட்டு தன் ஸ்நானத்திற்கு சென்றார்.

காலை 7:30 மணி:

பெரியவாளின் உடலில் கொஞ்சம் தளர்ச்சியாக இருந்ததால் அது பற்றி பால பெரியவாள், டாக்டர் ராமச்சந்திர ஐயர் மற்றும் மடத்து ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஸ்நானம் முடித்து மீண்டும் பிருந்தாவன ப்ரதக்ஷிணத்திற்கு வெளிய வரும் சமயத்தில் திடீரென உடலில் அசௌகரியத்தை உணர்கிறார் பெரியவர்.

காலை 7:45 மணி:

விவரம் தெரிந்ததும் பால பெரியவரும், பெரியவாளின் மருத்துவரும் அவரை அருகில் இருந்து கவனிக்கிறார்கள். பால பெரியவர் உத்தரணியால் துளசி தீர்த்தம் அளிக்கிறார். அதனை மட்டும் பருகிய பெரியவரை, காமாக்ஷி கோவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர்.

காலை 9:00 மணி:

மருத்துவர்கள் இதய துடிப்பை சீராக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். கடும் மூச்சு திணறலால் நினைவிழந்த பெரியவருக்கு இதயத்துடிப்பு குறைகிறது. உடனடியாக ஈ.ஸி.ஜி எடுத்த மருத்துவர்கள், காலை 9:05 மணிக்கு, ஹேவிளம்பி (2018) ஆண்டு, மாசி 16, சுக்ல பக்ஷ திரயோதசி திதியில், ஸ்ரீ மஹாபெரியவாளின் கரகமலர், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மை விட்டு ஹிரண்யகர்பத்தில் கலந்ததாக அறிவிக்கின்றனர்.

ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடும் கங்கை போன்ற பெரியவர், கடைசி நிமிடமும் ஒரு வியாதியால் கிடக்காமல் தன் குருவிடம் சேர்ந்தார்.

கடைசி பூஜை – தன் குருவிற்கு

கடைசி பயணம் – தன் குருவின் சமாதிக்கு
கடைசி உணவு – தன் சிஷ்யரின் கையிலிருந்து துளசி தீர்த்தம்

கடைசியாக அருளியது – எல்லோரும் க்ஷேமமா இருங்கோ!

கடைசியாக இருக்கப்போவது – தன் குருவின் சமாதி அருகிலேயே, காமாக்ஷி அம்மனை நோக்கியபடி நித்திய வாசம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.