Breaking News
தமிழகத்துக்கு அதிமுக அரசின் மன்னிக்க முடியாத துரோகம் வத்தலகுண்டில் வைகோ பேட்டி

*தமிழகத்துக்கு அதிமுக அரசின் மன்னிக்க முடியாத துரோகம்*

*வத்தலகுண்டில் வைகோ பேட்டி*

கொடைக்கானல் நகரச் செயலாளர் தாயகம் கா.தாவூர் மகன் திருமணம் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் – வத்தலகுண்டில், இன்று (11.10.2018) நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கிற அண்ணா திமுக அரசைப் போல வஞ்சகம் செய்யும் அரசு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இதுவரை தமிழகத்தில் இல்லை. சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பரந்துபட்ட சென்னை மாகாணத்தில்கூட யாரும் துரோகம் செய்தது இல்லை.

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் வரட்டும் என்கிற முறையில் கருத்துக் கேட்பே கூடாது என்று நினைக்கிறார்கள்.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மக்களின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கருத்துக் கேட்பில் பிரச்சினை செய்கிறார்கள். ஆகவே இந்தக் கருத்துக் கேட்பு முறையையே ரத்து செய்துவிடுங்கள் என்று மத்திய அரசே சொல்லத் துணியாத நிலையில் இத்தகைய துரோகத்தைச் செய்து, தமிழ்நாட்டைப் பாழ்படுத்தத் துடிக்கும் அதிமுக அரசுக்கு மன்னிப்பே கிடையாது.

மொத்த தமிழகத்தையே பாலைவனமாக்கி, பஞ்சப் பிரதேசமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்து, காவிரி தீரத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என்று பல திட்டங்களால் தமிழகத்தை நாசமாக்குகின்ற வகையில் மத்திய அரசு செயல்படும்போது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமைக்கு மாறாக வேலியே பயிரை மேய்வதைப் போல தமிழகத்துக்குக் கேடு செய்யும் அதிமுக அரசை ஆட்சியிலிருந்து விரைவில் அகற்றுவது ஒன்றுதான் தமிழக மக்களின் கடமையாகும்.

தொழில் முனைவோர் அனைவரும் ராஜ் பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா? என்று அன்றைக்குக் கேட்டேன்.

வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார் புரோகித். எந்த வழக்கறிஞர் என்ற பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதலமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார்.

தமிழக ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை – தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை – தொலைக்காட்சி குரல் வளையை நெறிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது பேட்டியில் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.