Breaking News
இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் இடையே கைகலப்பு

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றியது. இதைத் தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து கடந்த மாதம் 26-ந்தேதி சிறிசேனா நீக்கினார்.

புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்த அவரது நடவடிக்கையால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. சிறிசேனாவின் இந்த திடீர் நடவடிக்கைக்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. எனவே 14-ந் தேதி (நேற்று) நாடாளுமன்றத்தை கூட்ட அவர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் ராஜபக்சே அரசுக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால், சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கடும் அரசியல் குழப்பத்துக்கு நடுவில், இலங்கை பாராளுமன்றம் நேற்று கூடியது. அவையில் கடும் அமளி நிலவியது. இந்த களேபரத்துக்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொண்ட சபாநாயகர், அதன்மீது ஓட்டெடுப்பும் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை மீண்டும் இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் பேசிய ராஜபக்சே, நேற்றைய தினம் நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு தினம் என்றார். மேலும், அதிபராக இருந்த எனக்கு பிரதமர் பதவி முக்கியம் இல்லை எனவும் ஆவேசமாக பேசினார்.

இதற்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ராஜபக்சே மற்றும் ரனில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்கள் இடையே கை கலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.