Breaking News
போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போக்சோ சட்டம்

சென்னையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்–சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். சென்னையில் வாரத்தில் 4 சம்பவங்கள் இதுபோல நடக்கின்றன.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதுபோல சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் ஒருவரும் போக்சோ சட்டத்தில் கைதானார்.

இந்தநிலையில் தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் 6–ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அந்த சிறுவன் பிளஸ்–1 படிக்கும் மாணவன் ஆவார்.
சப்–இன்ஸ்பெக்டர் மகன்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவனின் தந்தை சென்னை போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். பாலியல் தொல்லைக்கு ஆளான 11 வயது சிறுமியின் தாயாரும் பெண் போலீஸ் ஏட்டாக உள்ளார். தந்தையும் போலீஸ் ஏட்டாக பணியாற்றுகிறார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள சப்–இன்ஸ்பெக்டரின் மகன், பாதிக்கப்பட்ட சிறுமியை போலீஸ் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மாலையில் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு, வீடு திரும்பிய சிறுமியை காணவில்லை. இரவு 8 மணியளவில் வேலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகுதான் சிறுமி மொட்டை மாடியில் இருந்து அழுதபடி கீழே இறங்கி வந்தார். பாலியல் தொல்லை கொடுத்த சப்–இன்ஸ்பெக்டர் மகனும் மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்து தப்பி ஓட பார்த்தார். அவரைப்பிடித்து அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமரசத்துக்கு அழைப்பு

புகார் கூறப்பட்டுள்ள சிறுவனின் தந்தையான சப்–இன்ஸ்பெக்டர், சிறுமியின் பெற்றோரிடம் எவ்வளவோ சமரசம் செய்து பேசி பார்த்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு உறுதியாக கூறிவிட்டனர்.

இதனால் தேனாம்பேட்டை மகளிர் போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் மகனிடம் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்தபிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.