Breaking News
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்தா? தலைமை தேர்தல் அதிகாரி பதில்

100 சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையமும், ‘கோல் குயிஷ்’ நிறுவனமும் இணைந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வினாடி-வினா போட்டி நடத்தியது.

போட்டியை ‘கோல் குயிஷ்’ நிறுவனத்தின் ரகு முன்னின்று நடத்தினார்.

முதல் 3 இடங்களுக்கு பரிசுகள்

இதில் ரூ.25 ஆயிரம் பரிசு தொகையுடன் முதல் இடத்தை கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மோகன்தாஸ், ஹரிசும், ரூ.15 ஆயிரம் பரிசு தொகையுடன் 2-வது இடத்தை தமிழகத்தை சேர்ந்த குமாரவேல், சதீஷ்குமாரும், ரூ.10 ஆயிரம் பரிசு தொகையுடன் 3-வது இடத்தை பிரதீக், ரமேசும் பெற்றனர். அவர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

நடவடிக்கை எடுக்கப்படும்

கேள்வி:- தேர்தலையொட்டி தமிழகத்தில் தான் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- பறக்கும் படைக்குழுவினர், வருமான வரித்துறை உள்பட அனைத்து துறைகளுடனும் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து முடிவு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் என்ன விதிமுறைகள் அளித்து இருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம் அதை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கேள்வி:- மதுரையில் போலீசார் பதிவு செய்யும் தபால் வாக்குப்பதிவின் போது, அ.தி.மு.க. வேட்பாளர் சென்று பிரசாரம் செய்து இருப்பதாக புகார்கள் வந்திருக்கிறதே?

பதில்:- இதுபோல் செய்யக்கூடாது. வாக்காளர்கள் சுதந்திரமாக சென்று வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் ரத்தா?

கேள்வி:- வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? அங்கு தேர்தல் ரத்தா?

பதில்:- அங்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வருமான வரித்துறையும் தகவல் கொடுத்து இருக்கிறது. அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து தகவல்களையும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்.

கேள்வி:- சில இடங்களில் மின்சார வினியோகத்தை துண்டித்துவிட்டு, பண பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டு வருகிறதே? தேர்தல் ஆணையத்துக்கு அப்படி எதுவும் புகார்கள் வந்ததா?

பதில்:- அப்படி எதுவும் புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 1950 இலவச எண்ணுக்கு வெவ்வேறு விதமான புகார்கள் வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருக்கிறது. ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.