Breaking News
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் 5 பெண்கள் உள்பட 7 பேர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து அவர்கள் மீது தண்ணீரையும் ஊற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள், பவானி அருகே உள்ள மயிலம்பாடி கன்னாங்கரட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 58), அவரது தம்பி அர்ஜுனன் (55), அக்காள் சம்பூர்ணம் (66), சிவராஜின் மனைவி வள்ளியம்மாள், அவருடைய மகள் உமாதேவி, அர்ஜுனனின் மனைவி நீலம்மாள், மகள் சுகன்யா என தெரியவந்தது.

புறம்போக்கு நிலம்

மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு சொந்தமான நாங்கள் பராமரித்து வந்த 4½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

அதில் கலந்து கொண்ட கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் சம்பந்தப்பட்ட 4½ ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னை மரத்திற்கு நஷ்டஈடு தரவேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் முறையிட்டோம்.

இழப்பீடு

அதற்கு அதிகாரிகள், ‘தென்னை மரத்துக்கு இழப்பீடு தர முடியாது, ஆழ்குழாய் கிணறு அமைத்து கொடுப்பதுடன், 2 வீடுகள் ஒதுக்கி தருகிறோம்’ என்று கூறினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை ஒருவர் எங்களிடம் வந்து, அதிகாரிகள் கூறியதுபோல் ஆழ்குழாய் கிணறு அமைத்து தரமாட்டார்கள். மேலும் வீடுகளும் ஒதுக்கமாட்டார்கள் என்று கூறினார். இதனால் மனம் உடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றோம்’ என்றனர். தீக்குளிக்க முயன்ற 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.