Breaking News
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை நிறுத்த நடத்தப்பட்ட நாடகம் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி கொள்கை இல்லாத, சுயநல கூட்டணி. பணத்தை வைத்து மட்டுமே உருவான கூட்டணி. 8 வழிச்சாலைக்கு எடப்பாடி பழனிசாமி கமிஷன் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கி உள்ளார். ஊழல் மிகுந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. குட்கா ஊழலில் முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது என செய்தி வந்துள்ளது. மத்திய அரசிடம் அ.தி.மு.க. கைகட்டி சேவகம் செய்கிறது. அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. ஏஜெண்டாக செயல்படுகின்றனர்.

ஆதரவு தாருங்கள்

நான் தொடர்ந்து அனைத்து கூட்டத்திலும் கேட்கிற கேள்வி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. கோடநாடு பங்களாவில் மர்ம மரணங்கள். 200 பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவத்தில் துணை சபாநாயகர் மகனுக்கு தொடர்பு உள்ளது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மூன்று கேள்விக்கு அ.தி.மு.க. அரசிடம் பதிலும் இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி. பல நல்ல திட்டம் உங்களுக்கு வந்தடைய தி.மு.க. வுக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கருணாநிதி எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ந.கோபால், கருணாநிதி, மனோகர், மாவட்ட நிர்வாகி கு.ப.முருகன், செந்தில், தேவராஜ், ஜார்ஜ், ஒன்றிய அமைப்பாளர்கள் பாலா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலூரில் பிரசாரம்

முன்னதாக நேற்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஏற்கனவே தி.மு.க.விற்கு 97 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் 119 தொகுதிகளை பெற்றுவிடுவோம். வெற்றி பெற்ற அடுத்த நொடி அ.தி.மு.க. ஆட்சி இருக்காது.

வருமான வரி சோதனை

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை எப்படியாவது நிறுத்திவிடலாமா, நாடாளுமன்ற தேர்தலை நிறுத்தினால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தேர்தலை நிறுத்திவிடலாம் என திட்டம்போட்டார்கள். அதற்காக துரை முருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினார்கள்.

அதனை கண்டு நாம் பயப்படப்போவதில்லை. சட்டமன்றத்தில் நமக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் இந்த ஆட்சி இருக்காது. ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் திட்டம். அதற்காக சி.பி.ஐ., புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை என அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது தேர்தல் கமிஷனையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வேலூரில் திட்டமிட்டு யாரிடமோ எடுத்த பணத்தை, அவர்களே வைத்துவிட்டு வேண்டுமென்றே நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். இதன்மூலம் தி.மு.க.வை தடுத்துவிடலாம் என நினைத்தார்கள். நிச்சயமாக நடக்காது.

காவலாளி வரவில்லை

பிரதமர் நரேந்திர மோடி இப்பொழுது தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். காவலாளி என்பவர் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தீர்த்துவைக்க வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு ஏதேனும் இன்னல்கள் வந்தால் ஓடோடி வரவேண்டும்.

‘கஜா’ புயல் ஏற்பட்டு 14 டெல்டா மாவட்டங்கள் பாதிப்படைந்தது. விவசாயிகள் அனைவரும் நடுத்தெருவிற்கு வந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள், தூங்குவதற்கு இடம் கிடையாது, சாப்பிடுவதற்கு வழி இல்லை, ஒதுங்கக்கூட இடம் இல்லாத ஒரு சூழ்நிலை. அப்பொழுதுகூட மோடி வரவில்லை, வரவேண்டும் என்றுகூட சொல்லவில்லை. நூற்றுக்கணக்கானோர் இறந்துபோனார்கள். ஆறுதல் செய்தி கூட சொல்லவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை

முன்னதாக அவர் நேற்று காலை 8.45 மணிக்கு ஆம்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஆம்பூர் பஜார் பகுதிக்கு சென்ற அவர் பழக்கடை பஜார், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று கடைக்காரர்கள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.