Breaking News
நாடு முழுவதும் ஊரடங்கு…? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை

புதுடெல்லி :

நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகை உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,38,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில் ஒரே நாளில் 15,41,299 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும், ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்’ என, வலியுறுத்திவருகின்றனர்.

தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் பாசி இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து கூறியுள்ளதாவது:

இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவை போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும்.

தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும். தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இரண்டாவது அலை தொடங்கியபோது, ‘அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்’ என, பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், முழு ஊரடங்கு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முழு ஊரடங்கை அமல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரப்பு தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.