Breaking News
178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் நேற்று நடந்தது. கவுன்சிலின் தலைவரான மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமை தாங்கினார். ராஜாங்க நிதி மந்திரி சிவபிரசாத் சுக்லா, மத்திய வருவாய் மற்றும் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா அனைத்து மாநில நிதிமந்திரிகள், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி (நிதிமந்திரி) ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
28 சதவீத வரிப் பட்டியலில் உள்ள 228 பொருட்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது 178 பொருட்களின் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் துணைக்குழு பரிந்துரை செய்திருந்ததை விட கூடுதலாக 12 பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி நிதிமந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-
28 சதவீத வரி பட்டியலில் இருக்கும் பல்வேறு பொருட்களின்  எண்ணிக்கையையும், வரி விகிதத்தை 18 சதவீதமாக குறைக்க கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி 178 பொருட் கள் 18 சதவீத வரி வளையத்துக்குள் செல்கின்றன. எஞ்சிய 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி பட்டியலில் உள்ளன.
வரி குறைப்பு செய்யப்பட்ட முக்கிய பொருட்களில் குக்கர்கள், ஸ்டவ்கள், வாட்டர் ஹீட்டர், பேட்டரிகள், மூக்கு கண்ணாடிகள் காபி, விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்கள், சுவிங்கம், சாக்லெட்டுகள், பற்பசை, ஷாம்பு, முகச்சவரத்துக்கு பின் பயன்படுத்தும் திரவங்கள், குளியல் சோப்பு, சலவைத்தூள், சலவை சோப்பு, பெண்களுக்கான அழகு சாதன மூலப்பொருட்கள், ஷேவிங் சோப் மற்றும் கிரீம்கள், சத்து பானங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மெத்தை, சூட்கேஸ், காகிதம், எழுதுபொருட்கள், கைக்கெடிகாரங்கள், இசைக்கருவிகள், கிரானைட், மார்பிள், குளியல் அறை பீங்கான் பொருட்கள், தோல் ஆடைகள், செயற்கை முடி, டோப்பா, வாகன மற்றும் விமான உதிரிபாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த வரி குறைப்பு வருகிற 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அதேநேரம் புகையிலை பொருட்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷனர், வாகுவம் கிளனர் பெயிண்ட் மற்றும் சிமெண்ட், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் மீதான வரி தொடர்ந்து 28 சதவீதமாகவே நீடிக்கும்.
13 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 5 பொருட்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் தற்போது 5 சதவீத வரி விதிக்கப்பட்டு வரும் 6 பொருட்கள் பூஜ்ய வரி நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான வரி 18 லிருந்து 5 சதவீதமாக குறைக் கப்படுகிறது. வெட் கிரைண்டர்கள், கவச வாகனங்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல்களின் உணவகங்களில் வரி 18 சதவீதமாக இருக்கும். இதற்கும் குறைவான அந்தஸ்து கொண்ட ஏசி வசதி கொண்ட மற்றும் ஏசி வசதி இல்லாத உணவகங்களில் இது ஒரே சீராக இருக்கும் விதத்தில் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அறை வாடகை ரூ.7,500க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த 5 சதவீத வரி பொருந்தும்.
இந்த வரிகுறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
வர்த்தகர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வரி கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சுமையை எளிதாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வர்த்தகர்களுக்கு மிகவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.