Breaking News
என்னை ‘பிளாக்மெயில்’ செய்தவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் உம்மன் சாண்டி பேட்டி
கேரளாவில், உம்மன் சாண்டியை முதல்-மந்திரியாக கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு நடைபெற்றபோது, சோலார் தகடு ஊழல் வெடித்தது. சோலார் தகடு அமைத்து தருவதாக, சரிதா நாயர் என்ற பெண்ணும், அவருடைய கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணனும் வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.
இதில், உம்மன் சாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி விசாரிக்க நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷனை உம்மன் சாண்டி அமைத்தார்.
அக்கமிஷனின் 1,073 பக்க விசாரணை அறிக்கை, நேற்றுமுன்தினம் கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சரிதா நாயரின் கடிதமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உம்மன் சாண்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விசாரணை கமிஷன் புதிதாக எதுவும் கூறவில்லை. பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. சரிதா நாயர் கடிதத்தில் உள்ள விஷயங்களை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், சரிதா நாயரின் நம்பகத்தன்மை பற்றியோ, கடித விவரங்களையோ விசாரணை கமிஷன் ஆய்வு செய்யவில்லை.
சரிதா நாயர் எழுதிய கடிதத்தில் உம்மன் சாண்டி பெயரே இல்லை என்று ஒரு சுதந்திரமான சாட்சி, சாட்சியம் அளித்துள்ளார். பிறகு எப்படி என் பெயர் வந்தது? சரிதா நாயர் சிறையில் இருந்தபோது 21 பக்க கடிதம் எழுதியதாக சிறை சூப்பிரண்டு கூறிய நிலையில், அது எப்படி 25 பக்க கடிதம் ஆனது?
இவற்றை எல்லாம் விசாரணை கமிஷன் கண்டுகொள்ளவில்லை. இது என்ன நீதி? இதைக்கண்டு காங்கிரஸ் பயப்படவில்லை. சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
அச்சுதானந்தன் ஆட்சிக் காலத்திலேயே சரிதா நாயர், தனது கம்பெனியை தொடங்கி விட்டார். ஆனால், அதையும் விசாரணை கமிஷன் கண்டுகொள்ளவில்லை. இந்த ஊழல் தொடர்பாக என்னை ஒருவர் ‘பிளாக்மெயில்’ செய்தார். உரிய நேரத்தில் அவரது பெயரை வெளியிடுவேன். அதுவரை காத்திருங்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.