Breaking News
‘‘பொறாமையால் டோனியை விமர்சிக்கிறார்கள்’’ இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்

பொறாமை காரணமாக சிலர் டோனியை விமர்சிப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

டோனிக்கு எதிராக விமர்சனம்

50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, மினி உலக கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி) ஆகிய மூன்று ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்றுத் தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை டோனிக்கு உண்டு. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக நீடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 36 வயதான டோனி, தற்போது ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனியின் பேட்டிங் மந்தமாக உள்ளது. அதனால் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், அகர்கர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் குரல் எழுப்பினர்.

ஆனால் டோனியை விட்டுக்கொடுக்காத இந்திய கேப்டன் விராட் கோலி, ‘டோனியை விமர்சிப்பது நியாயமற்றது. இந்திய அணியின் வெற்றிகளில் இன்னும் அவரது பங்களிப்பு அதிகமாக உள்ளது. வயதை குறி வைத்து வேண்டுமென்றே அவரை விமர்சிக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார்.

ரவிசாஸ்திரியும் ஆதரவு

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், விக்கெட் கீப்பரான டோனிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

டோனி சரியாக விளையாடக்கூடாது, அவருக்கு மோசமான நாட்கள் அமைய வேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள பொறாமை பிடித்த பலர் நினைப்பது போல் உள்ளது. இன்னும் சிலர் அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்போது முடிவடையும் என்பதை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் டோனியை போன்ற மகத்தான வீரர்கள் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்.

டோனி மீதான விமர்சனங்கள் என்னிடம் எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அணியில் டோனி எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் ஒரு அருமையான அணி வீரர். முன்பு மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். இப்போது அணியின் முக்கியமான வீரராக விளங்குகிறார். கிரிக்கெட்டில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். ஜாம்பவான். இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.

விவாதிப்பது இயல்பே

கடந்த ஓராண்டில், ஒரு நாள் கிரிக்கெட்டில் டோனியின் சராசரி ஸ்கோர் 65. அது மட்டுமின்றி சமீபத்தில் நடந்த இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் நமது அணியின் வெற்றிக்கு அவர் உதவிகரமாக இருந்தார்.

உங்களது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் போது டெலிவி‌ஷன் விவாத நிகழ்ச்சிகளில் இடம் பெறத்தான் செய்வீர்கள். அது போன்று தான் டோனி குறித்தும் விவாதிக்கிறார்கள்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.