Breaking News
சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள், பிரம்மச் சாரியான அய்யப்பனை வழிபட அனுமதிக்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி, எந்தவொரு மதத்தினரின் நம்பிக்கையிலும் கோர்ட்டு தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் பல்வேறு பெண் உரிமை ஆர்வலர்கள் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பதில் உறுதியாக உள்ளனர். அந்த வகையில், பூமாதா பிரிகேட் என்னும் அமைப்பின் தலைவரும், பெண் உரிமை போராளியுமான திருப்தி தேசாய், சபரிமலைக்கு சென்று பெண்களை சாமி தரிசனம் செய்ய வைப்பதில் தீவிரமாக உள்ளார்.

இவர் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிற கோவில்களில் அனுமதி பெற்றுத்தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016-ம் ஆண்டு கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மராட்டிய மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோவில் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்று திருப்தி தேசாய் அறிந்து கொள்ள விரும்பினார். இதற்காக அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு அனுமதி தருமாறு அகமது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து அவருக்கு பதில் வரவில்லை.

இதையடுத்து அவர் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை தானும், தனது ஆதரவாளர்களும் மறிக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து சாஹர்நகர் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட திருப்தி தேசாய், அங்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதன்பின்னரும் பெண்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்யமுடியவில்லை. அங்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்?

பெண் பக்தர்களையும், பத்திரிகையாளர்களையும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது பாரதீய ஜனதா கட்சியினர்தான்.

நான் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முயற்சித்தால், என்னை கொன்று விடப்போவதாக 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் மிரட்டல்கள் வருகின்றன.

இதற்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன். தீபாவளி பண்டிகை முடிந்ததும், நான் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.