Breaking News
வீரவணக்க தினம் நாளை கடைபிடிப்பு:பணியின்போது உயிரிழந்த போலீசாரை போற்றி புத்தகம் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவிப்பு

வீரவணக்க தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பணியின்போது உயிரிழந்த போலீசாரை போற்றி புத்தகம் வெளியிடப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

பணியின்போது உயிர் இழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி(நாளை) வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீசார் இரவு, பகல் என பொழுது பார்க்காமல், பண்டிகை தினம், விடுமுறை தினம் என்று நாள் பார்க்காமல், வெயில், பனி, குளிர் என சூழல் அறியாமல் பணியாற்றுகிற போலீசார் மனம் உடல்ரீதியான துன்பங்களுக்கு உள்ளாவதோடு, சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களை தடுத்தல், நிகழ்ந்த குற்றங்களை துப்பறிந்து குற்றவாளிகளை கைது செய்தல், கைது செய்த குற்றவாளிகளைப் பாதுகாப்பாக சட்டத்தின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்துதல் என்று வழக்கமான பணிகளின் போதே உடல் உறுப்புகளை இழந்த ஊனமாவதோடு, உயிர்களை இழக்கவும் வேண்டி உள்ளது.

மக்களின் நலன் காக்க தமிழ்நாடு போலீஸ்துறையில் பணியின் போது மொத்தம் 146 போலீசார் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு இறந்த வீர காவலர்களின் வீரத்தையும், தியாகங்களையும் நினைவு கூருவதாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டும் 21-ந் தேதி(நாளை) போலீஸ்துறையில் உயிர்நீத்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி போலீசாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் “தமிழ்நாடு போலீஸ்துறையின் வீரத்தியாகிகள்” என்ற பெயரில் தொகுப்பு நூல் வெளியிடப்பட உள்ளது.

வீரவணக்க நாளில் போலீசாரும், பொதுமக்களும் அவர்களது தியாகத்தை நினைவுக் கூர்ந்து நாட்டின் வளத்தையும், அமைதியையும் பேணிக்காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.