Breaking News
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள்!

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்’ என்று கூறியது

தீர்ப்பின் போது நீதிமன்றம், ‘சட்ட சாசனத்தின் 21 வது பிரிவு, வாழ்க்கைக்கான உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது. இது பொது மக்களுக்கும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் பொருந்தும். இருவரின் நலனையும் பாதுகாக்கும் நோக்கில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது.
இந்தியாவின் பட்டாசுத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது தமிழகத்தில் இருக்கும் சிவகாசியின் பட்டாசு தொழிற்சாலைகள் தான். உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு தங்களை வெகுவாக பாதிக்கும் என்று கருதியுள்ள தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், மாரியப்பன், ‘பட்டாசு விற்பனைக்கு முழுத் தடை விதிக்காத உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தற்போது பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விளக்கக் கோரி நாங்கள் மேல்முறையீடு செய்வோம்.

பட்டாசு உற்பத்தியில் முன்னர் 6,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிந்தது. ஆனால், அது தற்போது 4,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தத் துறையை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர்.
தொடர்ந்து விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தியை வெகுவாக குறைத்துக் கொண்டனர். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழக்கு உகந்த பட்டாசு என்ற ஒன்று இல்லை. பட்டாசுகளில் குறைந்த அளவிலாக ரசாயனங்களை பயன்படுத்தும்படி பார்த்துக் கொள்ளலாம்.

இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது நடைமுறைக்கு சரிபட்டு வராது. காரணம், தீபாவளியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான நடைமுறை பின்பற்றுப்பட்டு வருகிறது’ என்று விளக்கினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.