Breaking News
தமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல்- நிலவேம்பு கசாயம் குடியுங்கள்

தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல்கள் தமிழகம் முழுவதும் பரவும் அபாயம் இருக்கிறது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த தீக்ஷா, தக்‌ஷன் ஆகிய இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கும் சிலர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.

எனவே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலாலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த மாதத்தில் மட்டும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கடலூர், திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையால் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2400 ஆக குறைந்துள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிக பணியாளர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிக பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிக பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250 முதல் 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-ல் இருந்து 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்கள் ஆகியவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு கசாயம் வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் நிலவேம்பு குடிநீர் காய்ச்சி தயாராக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு பொட்டலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 407 அம்மா உணவகங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்காக மண்டலத்துக்கு தலா 10 கிலோ நிலவேம்பு பொடி கொடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மண்டலங்களுக்கு நிலவேம்பு பொடி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீரை குடிக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ‘டேமிபுளூ’ தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.