Breaking News
சபரிமலை: நீதிமன்ற உத்தரவால் கணவர் வீட்டுக்கு திரும்பிய கனக துர்கா: குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கணவர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதால் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கனக துர்கா நீதிமன்ற உத்தரவை பெற்று வீடு திரும்பினார். கணவர் வீட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன.

கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். அதன்பின் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது .

இதில் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார். ஆனால், கனகதுர்காவுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.

கனக துர்கா தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த கனக துர்காவின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனக துர்காவைக் கண்டித்த அவரின் மாமியார் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் கனகதுர்காவுக்கு காயம் ஏற்பட்டு பெரிதலமன்னா தாலுக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கிருந்து கிசிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கனக துர்காவின் மாமியாரும், கணவரும் அவரை வீ்ட்டுக்குள் சேர்க்க முடியாது எனக் கூறி வெளியேற்றி விட்டனர். இதனால் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் அவர் தங்கினார். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், கணவர் வீட்டுக்கு செல்ல உத்தரவிடககோரியும் கனக துர்கா உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் அவர் கணவர் வீட்டுக்குச் சென்று தங்க எந்த தடையும் இல்லை, அவருக்கு முழு உரிமை உள்ளது எனக்கூறி உத்தரவு பிறப்பித்தது. அவர் கணவர் வீட்டுக்கு செல்ல போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

இதையடுத்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து அவர் தனது கணவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கனக துர்காவின் கணவர் தனது குழந்தைகளையும், தனது தாயையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். வீட்டை பூட்டி சாவியை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து கனகதுர்கா போலீஸ் காவலுடன் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்.

பின்னர் கனகதுர்கா கூறுகையில்,‘‘ நீதிமன்ற உத்தரவை பெற்று வீட்டிற்குள் வந்துள்ளேன். வீட்டுக்கு திரும்பியதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகள் என்னுடன் தங்க எந்த தடையும் இல்லை. குழந்தைகளை பார்க்காமல் கஷ்டமாக உள்ளது. காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும். என் கணவர் என்னுடன் சேர்வார் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.