Breaking News
சபரிமலையில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பாரம்பரியம் சார்ந்தது, அது தீண்டாமை அல்ல -சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்து உள்ளது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

இதுபோல் மொத்தம் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமைப்பால் விசாரணை செய்யப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவாக தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்து கொள்ளுமாறு நான்கு பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா, பிந்து மற்றும் கனக துர்கா இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

ரேஷ்மா, ஷானிலா இருவரும் இரண்டு முறை கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள். பிந்து, கனகதுர்கா இருவரும் முதல்முறையாக கோவிலுக்குள் சென்று வந்தவர்கள் ஆவார்கள்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உட்பட பல்வேறு தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

சபரிமலையில் பெண்களை அனுமதித்த தீர்ப்பு எதிராக பராசரன் வாதாடினார். மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, தீண்டாமை காரணமல்ல. கோவிலுக்கான மரபை பின்பற்றி யார் வேண்டுமானாலும் வரலாம். கோவில் மரபு அடைப்படையில் தான் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மத நம்பிக்கை, கோட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிட்டது இல்லை. அருவருக்கதக்க கோவில் மரபு இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட்டு உள்ளன. சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பது இல்லை என்பது நீண்டகால மரபு என வாதாடினார்.

10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது, வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டல்ல. அலசி ஆராய்ந்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி நரிமன் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.