தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற அப்போலோ மருத்துவமனை அளித்துள்ள 12வது அறிக்கை அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.
பின்னர், நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றி அறிக்கைகளை அப்போலோ நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்த அறிக்கைகளில், மருத்துவர் ரிச்சர்ட் பியல் சென்னை வந்து சிகிச்சை அளித்தது; நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது ஆகியவை மிக முக்கியமானது.
இதனையடுத்து, நீண்ட நாட்களாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை எதனையும் வெளியிடாமல் இருந்த நிலையில், 11வது அறிக்கை ஒன்றை கடந்த மாதம் 21ம் தேதி அப்போலோ மருத்துவமனை வெளியிடப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த செய்தி அதிமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இன்று காலை கூட அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், ஜெயலலிதா பூரண குணம் அடைந்துவிட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வந்து ஆட்சிப் பணியில் ஈடுபடுவார் என்றும் கூறினார்.
இந்நிலையில், இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.