ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி நாளை வீடு திரும்புகிறார்; மு.க.ஸ்டாலின் தகவல்
மூச்சு திணறலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி நாளை (வெள்ளிக்கிழமை) வீடு திரும்ப இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாநிதி உடல்நிலை
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 1–ந் தேதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து மற்றும் ஊட்டசத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் 7–ந் தேதி வீடு திரும்பினார்.
இந்தநிலையில் 15–ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது. இதற்காக அவருக்கு தொண்டையில் துளையிட்டு சுவாசகுழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.
நாளை வீடு திரும்புகிறார்
தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேப்டாப்பில் பாட்ஷா படத்தை பார்த்த கருணாநிதி, தற்போது டெலிவிஷனில் செய்திகளை பார்க்கிறார். பத்திரிகைகளை படிக்கிறார்.
அவர் நாற்காலியில் அமர்ந்தபடி டெலிவிஷன் பார்க்கும் படத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அவரது உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்.
இந்தநிலையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் பேசியபிறகு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் எப்படியிருக்கின்றது?’ என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘தலைவர் கருணாநிதியின் உடல் நலம் நன்றாக தேறி வந்து கொண்டிருக்கின்றது. வெள்ளிக்கிழமை அன்று வீடு திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்றார்